4463. ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
கைபிடித்தாற் போதும் என்னோ டாடவா ரீர்
ஏசறல்நீத் தெனை ஆண்டீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
உரை: ஆசை வெட்கம் அறியாது என்பது பழமொழி. ஆசை மிக்கவர் வெட்கமின்றி யாதும் செய்வர் என்பது கருத்து. ஓசை - அலர் கூற்று. எங்கும் நீர் என் காதலர் எனவும், யான் நின் காதலியெனவும் மகளிர் அலர் கூறுகின்றனர் என்பதாம். கைபிடித்தல், கணவன் மனைவியாகக் கைப்பற்றுதல்; மணம் புணர்தல். ஏசறல் - ஏசறவு; வருத்தம். (5)
|