4464. சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
உரை: கன்மார்க்க மனம், கல்லைப் போன்ற மனம். கண்ணிசைந்த கணவர், கண்கொள்ளக் கண்டு மகிழவமைந்த கணவர்; கண்ணிறைந்த கணவர் என்பது உலக வழக்கு. சொன் மார்க்கப் பொருளாயினீர் - சொல்லும் பொருளுமாயினீர். அருட்சோதியீர் - திருவருள் ஞானவொளியை யுடையவரே. என் அறிவு வழி நிற்கும் மனத்தின்கண் எழுந்தருளினீர் என்ற கருத்தால் என்மார்க்க உளத்து உகந்தீர் என வுரைக்கின்றாள். (6)
|