4465.

     அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
          அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
     பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
          பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
     கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
          கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
     என்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
          என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்

உரை:

     அண்டமெலாம் கண்டவர் - அண்டங்கள் அனைத்தையும் படைத்தவர் அகண்ட பரிபூரணர் - அளந்து காண்டற்கரிய நிறைவுடையவர். பண்டம் - அண்டங்களின் அடங்கியிருக்கும் பொருள்கள். பற்று - பந்தம், பற்று வீடில்லாதவர் - பெத்த நிலை முத்தி நிலையாகிய இரண்டும் இல்லாதவர். “பந்தமும் வீடுமாய பதபதார்த்தங்களல்லான்” என்பர் அருணந்தி சிவனார். எண்தகு பொற்சபை - சான்றோர்களால் மதிக்கப்படுகின்ற பொன்னம்பலம்.

     (7)