4472.

     உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
          உண்மையுரைக் கின்றவரே அணையவா ரீர்
     கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
          கண்ணனைய காதலரே அணையவா ரீர்
     அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
          அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
     இலகுசபா பதியவரே அணையவா ரீர்
          என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

உரை:

     சொல் வேறு செயல் வேறுபாடுகளால் கலகம் பிறத்தலால், அக்கலகத்தும் இடம் அளிக்காதவர் என்றற்குக் “கலக மறுத்து ஆணடவரே” என வுரைக்கின்றார். பிணங்கிக் கலகமிடும் சமய ஞானிகட்குத் தனது சமரசத் தன்மை காட்டி ஒருமை யுறுவித்தலால் இவ்வாறு பேசுகின்றாள் எனினும் பொருந்தும். அலகு - அளவு. பொற்சோதி - பொன் வண்ணமாகிய தமது திருமேனியில் பொன்னிற வொளிதிகழ விளங்குபவர். இலகு சபாபதி - விளங்குகின்ற ஞான சபைக்குத் தலைவர்.

     (2)