4474. வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
உரை: வினை மாலை - வினைகள் விளைவிக்கும் மயக்கம். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” (சிவ. போ.) என மெய்கண்டார் கூறுவதறிக. நீத்தவர் - நீக்கியவர். வேத முடிப் பொருள் - வைதிக ஞானத்தின் முடியாகிய பிரமப் பொருள். அனை மாலை - விலக்க முயலும் நற்றாயின் சூழ்ச்சி. அருள் ஞானப் பேரொளியையே தனக்குக் கோயிலாகக் கொண்டவன் என்பது பற்றி, “அருட்பெருஞ் சோதிப் பதியீர்” என வுரைக்கின்றாள். புனை மாலை - பூக்களாலும் பொன்னாலும் அமைக்கப்படும் மாலை. வேய்ந்தவர் - சூடுபவர். மாலையிட்டவர் - மணந்து கொண்டவர். (4)
|