4475.

     சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
          சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
     உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
          உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
     பொறுமைமிக வுடையவரே அணையவா ரீர்
          பொய்யாத வாசகரே அணையவா ரீர்
     இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
          என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

உரை:

     விழைந்தீர் - விரும்பினீர். சிகாமணி - முடியில் அணியும் மணி. மணிபோன்றவரை மணி எனக் கூறுகின்றாள். உறு வயது - கூட்டத்துக்கேற்ற வயது. பொய்யாத வாசகர் - பொய் படாத சொற்களையுடையவர். இறுதி - ஈண்டுச் சாதல் குறித்து நின்றது.

     (5)