4476. சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
உரை: சாதி வேறுபாடும் சமய வேறுபாடுமின்றி எல்லார்க்கும் அருள் செய்பவராதலின், இறைவனைச் “சாதி மதம் தவிர்த்தவரே” என்று தலைவி கூறுகின்றாள். ஆதி - தோற்றம். அந்தம் - கேடு. ஆரணங்கள் - வேதங்கள். நூலறிவு கொண்டு உணரும் உணர்வுக் கெட்டாதவர் என்பதனால், “ஓதி யுணர்வரியார்” என்று உரைக்கின்றாள். இது - ஈது என வந்தது. (6)
|