4480.

     சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
          திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
     ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
          அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
     ஈரகத்ே­தன் அல்லஇங்கே அணையவா ரீர்
          என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
     ஏரகத்ே­த அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
          என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

உரை:

     உம்மைச் சேர்தற்கு ஆசை கொண்டேன் என்பாளாய். “சேர உம் மேல் ஆசை கொண்டேன்” எனத் தலைவி கூறுகின்றாள். எனது ஆசை மிகுதியை நீவிர் நன்கு அறிந்ததென வற்புறுத்தற்குத், “திருவுளமே யறிந்தது” என்று தெரிவிக்கின்றாள். இங்கு எனக்கு ஆர் - இவ்வுலகில் என் காதலன்புக்குரியவர் வேறு யாவர் உளர். அயலறியேன் - வேறு பிறரை நினைந்தறியேன். இரு மனம் உடைய பெண்ணல்ல என்பாள் - “ஈரகத்தேனல்லேன்” என இயம்புகிறாள். ஏர் அகத்தே அமர்ந்தருள்வீர் - ஞானத்தால் எழுச்சியுடைய தூயவர் உள்ளத்தில் எழுந்தருள்பவர். ஏரகம் என்னும் திருப்பதியில் உள்ளவர் முருகப் பெருமான்.

     (10)