4486.

     மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
          விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
     எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
          இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது

     வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
          வந்தாற் பெறலாம்நல்ல வரமே.

உரை:

     மெல்லியல் சிவகாம வல்லி - மென்மை இயல்பினளாகிய சிவகாமி யம்மை. சிவகாமியுடன் எழுந்தருளினால் எங்களுடைய வினை மறைந்து ஓடிவிடும்; எங்கட்கு நினது வரம்பில் இன்பத்தை வழங்கலாம் என்பது கருத்து. இங்கேயே இருக்கவேண்டுமென்பதில்லை; இந்த வடலூர்ச் சபையிலும் அங்குத் தில்லைச் சபையிலும் திருநடம் புரிந்தருளலாம் என்பதாம்.

     (5)