4494.

     ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
          ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
     காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
          காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம்
                                   சொல்கின்றதே.என்ன

உரை:

     ஆரணர் - வேதம் ஓதும் பிரமன். பூரணர் - எல்லாம் குறைவற நிறைந்தவர். எல்லாப் பொருள்கட்கும் உயிர்களின் நினைவு செயல்கட்கும் காரணமும் காரியமுமாகிய சிவமே நீயாதல் வேண்டி நிலவுலகில் உன்னைக் காண்டற் பொருட்டு வருகின்றார் என்று வேய்ங்குழலின் இன்னிசை ஒலிக்கின்றது என்பாளாய், “காரணமும் காரியமும் நீயாகத் தாரணியில் உன்னைக் காண வந்தார் என்றே வேணுநாதம் சொல்கின்றது” எனத் தலைவி கூறுகின்றாள். தாரணி - நிலவுலகம். வேணு - மூங்கில். மூங்கிலாலாவதால் வேணு எனவும், வேய்ங்குழல் எனவும் வழங்குகின்றது.

     (8)