4503.

     மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
          வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
     கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
          கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இது நல்ல

உரை:

     மதவழக்கு - சமயங்களின் பேரால் கொண்டொழுகப்படும் வழக்கங்கள். இவை உய்தி நல்குவன எனப் பலராலும் கருதப்படுதலின், “மதித்த சமய மத வழக்கு” எனக் கூறுகிறாள். வருணம் - சாதி; ஆசிரமம் - சாதிதோறும் அவ்வவ் பருவத்துக்குரிய ஒழுக்க நிலைகள். பிரமசரியம், இல்வாழ்க்கை, வனவாசம், துறவு என இவை நூல்களில் ஆசிரம வகைகளாகக் குறிக்கப்படுகின்றன. வள்ளற் பெருமான் காலத்தே வானப்பிரஸ்தம் என்னும் வனவாழ்க்கையும் துறவும் வழக்கு வீழ்ந்தமையின், “ஆசிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது” என்கின்றாள். வருண வேறுபாடுகள் மக்களினத்தின் ஒருமைப் பண்பைச் சீர்குலைத்து இனநலத்தைச் சிதறச் செய்தமையின், வருண ஆசிரமங்களைத் தலைவி வெறுத்துரைக்கின்றாள். லோகாசாரம் - உலகியற் பழக்க வழக்கங்கள். கொதிப்பு - ஆர்வ மிகுதி. புலை - புலாலுண்டல்.

     (3)