77. ஆனந்தப் பரிவு

தாழிசை

    அஃதாவது, ஞானத்தால் விளைந்த இன்ப மிகுதியால், உள்ளம் குழைந்து உரையாடுதல்.

4507.

     நானந்த மடையாதெந் நாளினும்உள்
          ளவனாகி நடிக்கும் வண்ணம்
     ஆனந்த நடம்புரிவான் ஆனந்த
          அமுதளித்தான் அந்தோ அந்தோ.

உரை:

     அந்தம் - அழிந்தொழிதல்; சாகா நிலை. எந்நாளினும் உள்ளவன் - எக்காலத்தும் சாவாதிருக்கும் உள்பொருளாதல். ஆனந்த அமுது - சிவஞானமாகிய நல்லமிர்தம். உயிர்கள் சாவா மூவாப் பெருநிலையெய்தும் குறிப்பொடு சிவனது திருநடம் நிகழ்வதெனச் சான்றோர் கூறுதலால், “எந்நாளினும் உள்ளவனாகி நடிக்கும் வண்ணம் ஆனந்த நடம் புரிவான்” என அறிவிக்கின்றார். அந்தோ - குறிப்பு மொழி.

     (1)