4509.

     துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும்
          முத்தர்களும் துணிந்து சொல்லற்
     கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில்
          ஆடுகின்றான் அந்தோ அந்தோ.

உரை:

     அகக்காட்சி நெறியில் வேதாந்திகள் துரிய நிலையையும் சித்தாந்திகள் துரியாதீத நிலையையும் மேனிலையாகக் கூறுவராதலின், வடலூர் வள்ளல் வைதிகத்தைத் தழுவி ஞானவான்களை, “துரிய பதம்” அடைந்த பெருஞ் சுத்தர்” என்று சொல்லுகின்றார். சிவபதம் கண்ட முத்தர்கள், அதனின் நீங்கி உலகியலை நினையாராதலின், அவரால் இத் தன்மைத்தென ஓதப்படாமை பற்றி, “முத்தர்களும் துணிந்து சொல்லற்கரிய பதம்” எனச் சிவபதத்தைச் சிறப்பிக்கின்றார். சிவபதம் மனம் வாக்குகளின் எல்லையைக் கடந்ததாதலால், “துணிந்து சொல்லற் கரிய பதம்” என்கின்றார் எனினும் பொருந்தும்.

     (3)