4539.

     ஆணவம் தீர்க்கு மருந்து - பர
          மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
     மாணவ வண்ண மருந்து - என்னை
          வலிய அழைத்து வளர்க்கு மருந்து. ஞான

உரை:

     ஆணவம், ஆன்ம வறிவைச் சுருக்கும் ஆணவமலம். பரமானந்தத் தாண்டவம் - மேலான சிவானந்தத்தை எய்துவிக்கும் திருக்கூத்து. ஞான மாண்புடையனாகுமாறு செய்யும் மருந்து என்பார், “மாணவ வண்ண மருந்து” எனவுரைக்கின்றார். வண்ண மருந்து - அழகிய மருந்து. வலிய அழைத்தல் - வலியப் போந்து ஆட்கொள்ளுதல்.

     (22)