4546.

     உன்னற் கரிதா மருந்து - எனக்
          குள்ளும் புறத்தும் உலாவு மருந்து
     தன்னந் தனித்த மருந்து - சுத்தச்
          சாக்கிரா தீதச் சபேச மருந்து. ஞான

உரை:

     உன்னற் கரிது, எண்ணி யறிய வொண்ணாதது. சாக்கிரதீதம், நனவு நிலையில் கருவி கரணங்களோடு கலவாமல் அதீதாவத்தைக்குரிய காட்சி பெறுவது. “பொற்புறு கருவி யாவும் புணராமே அறிவிலாமைச் சொற்பெனும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற சிற்பரமதனாலுள்ளச் செயலறுத்திடவுதிக்கும் தற்பரமாகி நிற்றல் சாக்கிராதீதம் தானே” (சிவப். 80) என்று உமாபதி சிவனார் தெரிவிப்பது காண்க. சபேசன் - சபாநாயகனாகிய ஈசன்.

     (29)