4547. ஒன்றில் ஒன்றான மருந்து - அந்த
ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து
அன்றிமூன் றான மருந்து - நான்
காகிஐந் தாகி அமர்ந்த மருந்து. ஞான
உரை: ஒன்றில் ஒன்றாதல் - பொருளொன்றிற் கலக்குமிடத்து வேறறக் கலந்து ஒன்றித் தோன்றல். ஒன்றில் இரண்டாதல் - சிவமாகிய ஒன்றில் சிவமும் சத்தியுமாய் இரண்டாதல். மூன்றாதல் - அருவம் உருவம் அருவுருவம் என உருவத்தால் மூன்றாதல். அற முதலிய உறுதிப் பொருள் நான்கையும் பெறு முறையில் நான்காதல். படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களைப் புரியுமாற்றால், பிரமன், திருமால், உருத்திரன், சதாசிவன், மகேசன் என ஐந்தாதல். (30)
|