4548.

     வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
          வெளியும் கடந்து விளங்கு மருந்து
     ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
          ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. ஞான

உரை:

     வெளிக்குள் வெளி - மாயா காரிய வெளிக்குள் வியோம வுபசாந்த வெளி. எல்லா வெளியும் கடந்து விளங்குதல் - மாயா வெளிக்கு அப்பாலான பரவெளிக்கும் அதற்கு மேலுள்ள ஞான வெளிக்கும் அதற்கு மேலுள்ளது சிவபோகப் பெருவெளியாதலின் அங்குள்ள சிவத்தை, “எல்லா வெளியும் கடந்து விளங்கும் மருந்து” எனக் குறிக்கின்றார். தூலம் சூக்குமம் காரணம் எனப் பிரித்துணரப்படுதல் பற்றி, “எல்லா ஒளியும் தானாகிய மருந்து” எனக் கூறுகின்றார்.

     (31)