4551. மலமைந்து நீக்கு மருந்து - புவி
வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து
நலமிக் கருளு மருந்து - தானே
நானாகித் தானாளு நாட்டு மருந்து. ஞான
ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து.
உரை: மலம் ஐந்து - ஆணவம், கன்மம், மாமாயை, மாயை, திரோதாயி என்ற ஐந்து. புவி வானம் அண்டம் - நிலம் முதல் வான் ஈறாகிய பூதங்களைத் தன்னுட் கொண்ட அண்டம். தானே நானாகித் தான் ஆளும் நாட்டு மருந்து - தானாகவே வலியப் போந்து என்னுட் புகுந்து யானாய் என் கருவி கரணங்களை இயக்கும் மருந்து. (34)
|