கண

கண்ணிகள்

4553.

     சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
          சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
     தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
          தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. சிவசிவ

உரை:

      ஞான மயமான பரம்பொருளாதலால் “சிற்பரமாம் பரஞ்சோதி” எனத் தெரிவிக்கின்றார். பரஞ்சோதி - மேலான சிவவொளி. சிதம்பர சோதி - சிதம்பரத்தில் காணப்படும் சோதி. தானே பரம்பொருளாய்த் தத்துவங்களின் உள்ளுறு ஒளியாய்த் திகழ்வது பற்றி, “தற்பர தத்துவ சோதி” எனச் சாற்றுகின்றார். சிவமாம் தன்மை நல்கினமை விளங்க, “என்னைத் தானாக்கிக் கொண்ட தயாநிதி” என்று புகல்கின்றார். தயாநிதி - அருட் செல்வம்.

     (2)