4556.

     ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
          ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
     ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
          உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ

உரை:

     முற்சோதி - ஆதியந்தங்களையுடைய சோதிப்பொருள்கள் அனைத்திற்கும் முற்பட்டதாகிய சோதி. அரன் ஆதியர் - அரன் அயன் திருமால் உருத்திரன் முதலியோர். பசுபாச ஞானங்களால் அறிதற்கரியது என்றற்கு, “ஓதி யுணர்வரும் சோதி” என உரைக்கின்றார். உயிர்தோறும் உண்ணின்று ஞானமயமாய்த் திகழ்வது பற்றி, “எல்லா வுயிர்களினுள்ளும் ஒளிர்கின்ற சோதி” என மொழிகின்றார்.

     (5)