4558. பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
உரை: பார் முதல் ஐந்து - நிலம் நீர் தீ வளி வான் என்று பூதம் ஐந்து. இப் பூதங்கள் ஒவ்வொன்றினும் எங்கும் நிறைந்திருப்பது புலப்பட, “ஐந்தில் பக்கம் மேல் கீழ் நடுப்பற்றிய சோதி” எனக் கூறுகின்றார். ஓர் ஐம்பொறி யுரு - அறிகருவிகளான மெய் வாய் கண் மூக்கு செவி என ஐந்தின் உருவம். இப் பொறிகளிலும் ஓரிடத்தன்றி எங்கும் நிறைவது தோன்ற, “பொறிக்கு உள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற சோதி” என்று இயம்புகின்றார். (7)
|