4560. மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
இனமான உள்ளக ஜோதி - சற்றும்
ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி. சிவசிவ
உரை: மனமாதி - மனம். சித்தம், அகங்காரம், புத்தி என்ற நான்கு. இவை பொறி புலன்களாகி புறக் கருவிகட்கு உள்ளும் புறமுமாய் உள்ளேயிலகுவது விளங்க, “அவை வாழ அகம் புறம் வாழ்கின்ற சோதி” என்றும், மன முதலிய கரணங்கள் தத்தம் தொழில்களை முறையாகச் செய்தற் பொருட்டு இறைவன் அவற்றின் உள்ளும் புறமும் நிறைவது பற்றி, அவை வாழ அகம் புறம் வாழ்கின்ற சோதி” என்றும் இயம்புகின்றார். மன முதலியன உணர்வுக் கருவிகளோடு உணர்உருவாய் இறைவனும் நிறைவதால், “இனமான உள்ளகச் சோதி” எனவும், அவற்றின்கண் மிகுதல் குறைதலின்றிச் சமநிலையில் நின்று அவற்றை இயக்கும் அருட் செயல் விளங்க, “ஏறாது இறங்காது இயக்குமோர் சோதி” எனவும் எடுத்துரைக்கின்றார். ஏறுதல் - மிகுதல்; இறங்குதல் - குறைதல். (9)
|