4561.

     முக்குண மும்மூன்றாம் ஜோதி -அவை
          மூன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
     எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
          எல்லாம் கடந்ததே இலங்கிய ஜோதி. சிவசிவ

உரை:

     முக்குண மூன்றாம் - சத்துவம், தாமதம், இராசதம் என்ற மூன்றாகிய குணங்களால் மூவுருப் பெறுதல் பற்றிச் சிவத்தை, “முக்குணமும் மூன்றாம் சோதி” என மொழிகின்றார். மேலும் கீழும் முன்னும் பின்னுமாய்க் குண மூன்றும் இயங்கியவண்ணம் இருத்தல் பற்றி, “அவை முன்பின் இயங்க முடுக்கிய சோதி” என்று கூறுகிறார். முக்குணத்துள்ளும் கலந்து நிலவினும், இறைவன் குணாதீதன் என்பார், “குணம் எல்லாம் கடந்தே இலங்கிய சோதி” என்று கூறுகின்றார்.

     (10)