4562.

     பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்
          பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி
     பகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்
          விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி. சிவசிவ

உரை:

     பகுதி மூன்றாதல் - மூலப்பகுதி, குணதத்துவம், புத்தி தத்துவம் என்பனவாம். பகுதி பலவாதல் - தைசதாங்காரம், வைகரியாங்காரம், பூதாதியாங்காரம் எனப் பலவாம். சிவ பரம்பொருள் ஒன்றினின்று தோன்றிய தன்றாதலின், “விகுதி யொன்றின்றி விளக்கிய சோதி” என வுரைக்கின்றார். தனக்கொரு மூலம் இல்லாதது பகுதி, பகுதியிலிருந்து தோன்றுவது விகுதி.

     (11)