4563. கால முதற்காட்டும் ஜோதி - கால
காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும
குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் ஜோதி. சிவசிவ
உரை: காலத்தைக் காட்டும் முதற்பொருள் சிவ பரம்பொருள்; ஆனால் அது கால தத்துவத்துக்கு அப்பாற்பட்ட தென்றற்குக் “கால காரணத்துக் கப்பால் கடந்ததோர் சோதி” எனக் கட்டுரைக்கின்றார். கோலம் - குணத்தொடு கூடிய தோற்றங்கள். குணாதீதமாயினும் சிவஞானத்தைக் குணமாக வுடைய தென்றற்குச் “சிற்குணப் பெருஞ் சோதி” என்று தெரிவிக்கின்றார். (12)
|