4565. சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
முத்தர் அனுபவ ஜோதி - பர
முத்தியாம் சோதிமெய்ச் சித்தியாம் ஜோதி. சிவசிவ
உரை: சத்தர் - சத்தியையுடைய சிவபேதங்கள். சத்தி பேதங்கள், சிவசத்தி யொன்றே காரிய வேறுபாட்டால் பராசக்தி, திரோதன சத்தி, இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி எனப் பஞ்ச சத்திகளாயும், ஈசான முதற் சத்தியோ சாதம் ஈறாகிய பஞ்ச சத்திகளாயும், ஆரணி சனனி இரோதயித்திரி என மூவகைச் சத்திகளாயும், நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதையாகிய பஞ்ச சத்திகளாயும், வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரிணி, பலவிகரணி, பலபிரதமனி, சர்வ பூத தமனி என அட்ட சக்திகளாயும், பரவாகீசுவரி, அபரவாகீசுவரி, மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி என்று எழுவகைச் சத்திகளாயும்; உன்மனை, சமனை, வியாபினி, சத்தி, நாதாந்தம், நாதம், நிரோதி, அர்த்த சந்திரன், விந்து, விடம், அருக்கீசம், மேதையாகிய கலைகளாயும், இன்னும் பலவேறு வகைப்பட்டும் நிற்கும்; இச் சத்திகட்கிடமாகிய சத்தர்களும் பலவேறு வகைப்படுவர். இச்சத்தி வகை பற்றையும் தொழிற்படுத்துவது சிவமாதலின், “அவர் சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் சோதி” என்று கூறுகின்றார். முத்தர் - முத்திப் பேற்றுக்குரிய ஞானவான்கள். மெய்ச்சித்தி - முத்தியின்பத்தைக் கையகப்படுத்தும் தன்மை. (14)
|