4571.

     என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே
          இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி
     அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை
          ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி. சிவசிவ

உரை:

     சீவனாகிய என்னைச் சிவமாம் தன்மை எய்வித்தமை தெரிவிப்பாராய், “என்னைத் தானாக்கிய சோதி” என வுரைக்கின்றார். மிக்க அருட் சோதி, மிக்க என்ற பெயரெச்சத் தகரம் விகாரத்தாற் கெட்டு மிக்கருட் சோதியென வந்தது. ஆண்டு - ஆட்கொண்டு. அருளமுதம் - திருவருள் ஞானமாகிய அமுதம்.

     (20)