4572.

     சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
          செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
     புத்தமு தாகிய ஜோதி - சுக
          பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சிவசிவ

உரை:

     சித்தம் சிவமாக்குதல் - சித்தமாகிய அந்தக்கரணத்தைச் சிவகரணமாக்கியுய்வித்தல். அக்கரணம் துணையாகச் செய்யப்படும் தவத்தால் எய்தும் ஞான நாட்டம் பெற்று உள்ளத்தே சிவத்தைக் காணும் திறம் விளங்க, “செய்த தவத்தால் தெரிந்த உட்சோதி” என்று செப்புகின்றார். மாணிக்கவாசகர், “சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்” (தோனோக்) என உரைத்தருளுவது காண்க. புத்தமுது - புதுமை குன்றாத ஞானாமிர்தம்.

     (21)