4573. தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. சிவசிவ
உரை: தம்பம் - குண்டலினி என்னும் சத்தி என்பர். மூலாதாரம் முதல் ஆஞ்ஞை வரை ஒளி மயமாய் நிற்றலின், அது தம்பம் எனப்படுகிறது. தம்பம் - தூண். மணி மேடை என்பது கபால பீடம் என்பர். அதனைத் திறந்துகொண்டு உபசாந்தத்தில், சிவவெளியை யோகியர் காண்பராம். சிவாகாரமாகிய பரசிவ வெளி, “விம்பப் பெரு வெளி” எனப்படுகிறது. அங்கே ஒளிரும் சிவசூரியனைப் பரசிவத்தின் விம்பமாகவுரைக்கின்றார். வீதி - துவாத சாந்த நெறி. வீடு - நெறியின்கண் திகழும் அமுத சந்திர நிலையம். (22)
|