4578. விந்து ஒளிநடு ஜோதி - பர
விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி
நம்துயர் தீர்த்தருள் ஜோதி - பர
நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி. சிவசிவ
உரை: விந்து ஒளி நடு சோதி - ஒளி வடிவாகிய விந்து தத்துவத்தின் நடுவே நின்று விளங்கும் சோதி. விந்துவாகிய ஒளிக்குள்ளும் நிறைதல் பற்றி, “விந்து ஒளிக்குள் விளங்கிய சோதி” எனக் கூறுகிறார். விந்து தத்துவம் - தொழில் மயமான சத்தி தத்துவம். சுத்த மாயா மண்டலத்தின் மேலது நாதம்; அதற்கப்பால் விளங்குவது பரநாதம்; அதன் மேலாய நிலை “பர நாதாந்த நாடு” எனக் குறிக்கப்படுகிறது. (27)
|