4580.

     தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
          சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
     என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை
          ஈன்றைந் தொழில்செய் என் றேவிய ஜோதி. சிவசிவ

உரை:

     சுத்த சன்மார்க்க சங்கத்தவர் மேற்கொண்டு போற்றும் அருட்சோதியைச் “சுத்த சன்மார்க்க சங்கம் தழுவிய சோதி” என்று சிறப்பிக்கின்றார். ஐந்தொழில் செய் என்று ஏவிய சோதி, படைத்தல் முதலிய தொழில்களைச் செய்க என்று பணித்தருளிய சோதி. சீவன் சிவமாகிய பின் சிவத்தின் தொழில் ஐந்தையும் செய்தல் முறையாதலால், இவ்வாறு கூறுகிறார் போலும்.

     (29)