4583.

     ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்
          என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
     சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்
          தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி. சிவசிவ

உரை:

     எல்லா வுலகங்களும் உயிர்களும் தன்னுள் ஒடுங்க, சிவமாகிய தான் ஒன்றே, அவை யனைத்துக்கும் அந்தமாதல் விளங்க, “ஏகாந்தமாகிய சோதி” என இயம்புகின்றார். தான் அவை யனைத்திலும் கலந்து பிரிவின்றி இயைந்திருக்குமாறு புலப்பட, “என்னுள் பிரியாதிருக்கின்ற சோதி” என மொழிகின்றார். சாகா வரம் - பிறப்பிறப்பில்லாத பெருநிலை; பெற்றுள்ள உடம்பிலிருந்து சாகாத வரம் எனக் கூறுபவரும் உண்டு. அழியும் பொருளையுண்டு உருவாகிய உடம்பு அழிந்தே தீருமாதலின், வள்ளற் பெருமான் குறித்தருளும் உடம்பு சத்திய நித்தியத் திருவருள் ஞானவுடம்பாகும். அதனோடே என்றும் இருந்து சிவபோகத்தை நுகர்தற் பொருட்டு, “சாகா வரம் தந்த சோதி” என்று சொல்லுகின்றார். ஞான வுடம்பு பெற்றமையால் சிவமாயின நிலைமை விளங்க, “என்னைத் தானாக்கிக் கொண்ட சத்திய சோதி” எனச் சாற்றுகின்றார்.

     (32)