கண
கண்ணிகள்
4586. சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: பலவேறு சமய நூல்கள் கூறும் மெய்ப்பொருள்களுள் சிவமொன்றே பரம்பொருளாவது எனத் தெளியும் நல்லறிவு நல்கினமை விளங்கச் “சிவமே பொருள் என்று தேற்றி” என்றும், சிவஞானப் பரவெளியை யடைதற்குரிய நெறியில் தம்மையுய்த்தமை பற்றி, “சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றி” என்றும், தாம் சிவமாம் தன்மை எய்தினமையின், “சிவமாக்கிக் கொண்டது பாரீர்” என்றும் இயம்புகின்றார். சிவதத்துவத்தின் உச்சியை, “சிவவெளிக் கேற்றும் சிகரம்” எனத் தெரிவிக்கின்றார். சிகரம் - கோபுரத்தின் உச்சி. தில்லையம்பலத்துத் திருநடம் புரியும் அருட்சோதி, “திருச்சிற்றம்பலத்துத் திருநட சோதி” எனப்படுகிறது. (2)
|