4587.

     வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
          விளைவு பலபல வேறென்று காட்டிச்
     சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     மாயா காரியமாகிய எண்ணிறந்த அண்டங்களும் உலகுகளும் மூல காரணமாகிய மாயை ஒன்றின் விளைவாதலால், அதனை “வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி அதில் விளைவு பல பல வேறென்று காட்டி” எனவும், அவற்றின் உண்மையில் களையுணரும் உணர்வு பெற்றமையின், “சித்தெல்லாம் தந்தது பாரீர்” எனவும் எடுத்துரைக்கின்றார். சித்து - ஞானம்.

     (3)