4593. துரியத் தலமூன்றின் மேலே - சுத்தத்
துரியப் பதியில் அதுஅத னாலே
தெரியத் தெரிவது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
உரை: கீழாலவத்தை, மேலாலவத்தை, நின்மலாவத்தை என்ற மூவிடத்தும் நிலவும் துரியாவத்தை நிலை, துரியத் தலம் மூன்று எனப்படுகிறது. சாக்கிராத துரியம், பரையில் அதீதமாகிய சுழுத்தின்கண் துரியம், சுத்தாவத்தை துரியம் என்று துரிய தலம் மூவகையாக மொழிவதுமுண்டு. இவற்றைத் துகளறு போதம் முதலிய நூல்களுள் காண்க. சுத்த துரியப் பதி - சுத்தாவத்தைக்கண் நிலவும் துரிய தலம். துரியக் காட்சியால் அந்நிலை விளங்குவது பற்றி, “அது வதனாலே தெரியத் தெரிவது” என்று உரைக்கின்றார். (9)
|