4606.

     எள்ளலில் வான்முதல் மண்ணும் -அமு
          தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
     தெள்ளமு தாம்இது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     எள்ளல் இல் வான் முதல் மண் - இகழ்ந்து விடுதற்கில்லாத வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியவை. அமுதம் - இவ்வைந்தின் கலப்பால் உண்டாகிய உலகபோகம். சிவ பரம்பொருளாகிய தெளிந்த அமுதத்தை நோக்க, உலகியற் போகம் மிக மிகச் சிறியது என்பாராய், “இதில் ஓர் இறையளவு” எனக் கூறுகின்றார்.

     (22)