4613.

     எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
          எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
     திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     எண்ணிய எண்ணங்கள் யாவும், எண்ணியவாறே எய்தினமையால் இறைவன் திருவருளை நினையும் எண்ணம் அருள் நெறியில் வன்மையுற்றுத் திண்ணிதாயிற்று என்பது கருத்து. எண்ணுபவர் திண்ணியராயின், எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்பர் திருவள்ளுவர். வடலூரடிகள் எண்ணிய எண்ணியவாறு எய்தித் தம்மைத் திண்ணியராக்கின வென இதனால் தெரிவிக்கின்றார்.

     (29)