81. அருட்பெருஞ்ஜோதி அகவல்

நிலைமண்டில ஆசிரியப்பா

4615.

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி

உரை:

     திருவருளாகிய பெருமை சான்ற, ஒளிப் பொருளாகிய சிவ பெருமானே! அருள் நெறியாகிய சிவநெறியைச் சார்ந்து திருவருளின்ப நிலையமாகிய பெருநிலையில் எழுந்தருளுகின்ற திருவருளுருவாம் சிவ முதற்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி யாண்டவனே. எ.று.

     சிவ பரம்பொருளின் அருட்சத்தி இங்கே அருள் எனப்படுகிறது. சிவசத்தி அருள் வழங்கும் ஒளி மயமாய் அருவாகிய சிவத்துக்கு உருவும் திருவும் நல்கிச் சிறப்பித்தலால் சிவன் அவ்வுருவை மேவிப் பேரொளிப் பிழம்பாய்ப் பிறங்குவது பற்றி, “அருட்பெருஞ்சோதி” என்று குறிக்கப்பெறுகின்றான். பேரொளிப் பிழம்பாயினும், வெம்மையென்பதின்றித் தண்ணிய அருளாய் விளங்குவதால், “அருட்பெருஞ்சோதி” என்று நான்குமுறை அடுக்கிக் கூறுகின்றார். “நீடு பராசக்தி நிகழ் இச்சா ஞானக் கிரியை தர அதனை நிமலன் மேவி, நாடரிய கருணை திருவுருவமாகிப் பல கலை நவின்று” (சிவப் ) என உமாபதி சிவனார் உரைப்பது காண்க. சிவமும் சத்தியுமெனப் பிரித்தற்கின்றி விளங்கும் பரசிவத்தையும், பின்னர் அது இச்சை, ஞானம், கிரியையென மூவகை யொளிப் பிழம்பாதலை நினைந்து நான்குமுறை “அருட்பெருஞ்சோதி” என்று ஓதுகின்றார் என்பதும் ஒன்று. உடல் கருவி கரணம் உலகு என்ற நான்கினோடு பொருந்தி நின்று ஓதுவது பற்றி, “அருட்பெருஞ்சோதி” என நான்கு முறை ஓதுதல் வேண்டிற்று எனினும் பொருந்தும். சிவத்தின் சோதி சொரூபத்தை, “சோதி முதலாய் நின்றான்” (முதுகுன் ) எனவும், “பாதி பெண்ணுருவாகிய பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதியே” ( மனத்தொகை ) எனவும் திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் உரைப்பது காண்க. இறைவனை “அருட்பெருஞ்சோதி” என வடலூரடிகள் குறிப்பது வாழையடி வாழையாக வரும் தொன்னெறியென உணர்தல் வேண்டும். அருள் ஞானவுருவாகிய சிவத்தின் செந்நெறியடைபவர்க்கு இவ்வருட் பெருஞ்சோதியென்னும் திருமந்திரம் உரிய தென்றற்கும், நெறி முடிவில் எய்துதற் கமைந்த சிவபோகப் பெருநிலையை எய்தினோர்க்கும் அருட்பெருஞ்சோதியென்ற பொருளுரை வேண்டுவ தென்றற்கும், இம்மந்திரமொழிக்குரிய உட்பொருள் சிவமே என வற்புறுத்தற்கும், “அருட் சிவநெறி சார் அருட் பெருநிலை வாழ், அருட் சிவபதியாம் அருட்பெருஞ்சோதி” என மொழிகின்றார்.