4619. கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
உரை: கண் முதலிய கருவிகளாலும் மன முதலிய கரணங்களின் நுண்ணுணர்வாலும், மூலப்பகுதியின் காரணமாகிய பிரகிருதி மாயையாலும், எண்ணப்படும் புருட தத்துவங்களாலும், அவற்றின் மேலுள்ள சுத்த வித்தையாகிய தத்துவத்தாலும் சொல்லப்படும் மேன் மேலாக வுள்ள உணர்வாலும், வான் முதல் சத்தி தத்துவம் ஈறாகவுள்ள தத்துவங்களால் மேன்மேலாகத் தொடர்ந்து காணும் அறிவாலும் விளங்கிக் கொள்வது அரிதாம் என்று தத்துவ முணர்ந்த சான்றோர் சிவத்தை யடையும் ஆர்வம் பெருக உய்த்துணர நிற்கும் அருட் பெருஞ் சோதியாகிய என்னுடைய அரசே, வணக்கம். எ.று.
கண் முதல் பொறி - கண், காது, மூக்கு, வாய், மெய் என்பன. மன முதற் கரணம் - மனம், சித்தம், அகங்காரம், புத்தி கரு, நுண்ணுணர்வு, பகுதி, மூலப் பகுதி, இது பிரகிருதி மாயா காரியமாதலின், அதனைக் கரு எனக் குறிக்கின்றார். புருட தரம் - புருட தத்துவம்; இவை கலை முதல் புருடன் ஈறாகவுள்ள ஏழும் அடங்க “புருட தரத்தினால்” எனக் கூறுகின்றார். பரம் என்பது சுத்த தத்துவம். இத்தத்துவங்களாலும் எய்தலாகும் உணர்வுகள் படி முறையில் கீழ் மேலாக விளங்குவது பற்றி, “பரம்பர வுணர்வால்” என்று பகர்கின்றார். மூலப் பகுதியின் காரியமாகிய விண் முதல் சுத்த மாயையின் காரியமாகிய சத்தி தத்துவம் ஆகிய தத்துவ வறிவுகளால் எய்தும் அறிவுகளை நோக்கின் மூலப் பகுதி யறிவு கீழாகவும் சத்தி தத்துவ வறிவு மேலாகவும் அமைவதால் அவற்றை, “பராபர அறிவு” என வுரைக்கின்றார். தத்துவங்களின் ஞானம் சிவத்தை நல்கும் சிவஞானமாகா எனத் தத்துவ நூலார் கூறுதல் விளங்க, “விளங்குவ தரிதென உணர்ந்தோர் படித்திட ஓங்கும் அருட் பெருஞ் சோதி என் அரசே” என மொழிகின்றார். தத்துவ ஞானம் அபரம் என்றும் திருவருட் சிவஞானம் பரம் என்றும் குறித்தவாறாம். (3)
|