4620.

     நசைத்தமேல் நிலைஈ தெனவுணர்ந் தாங்கே
          நண்ணியும் கண்ணுறா தந்தோ
     திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
          திரும்பின எனில்அதன் இயலை
     இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
          இசைத்திடு வேம்என நாவை
     அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
          அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

உரை:

     பெரிய வேதங்கள், விரும்பிய மேனிலை இதுவாம் என வுணர்ந்தும் அந்நிலையினை அடையாமல், அந்தோ, திகைப்புற்று மெலிந்து மயங்கி முயற்சி கைவிட்டுப் பின்வாங்கின என்றால் அந்த மேன்மை நிலையின் இயல்பை உரைத்தல் எவ்வாறாம்; ஐயோ, உணர்ந்த அளவிற் சிறிது சொல்லுவோமே என்று நாவை அசைத்தற்கும் அரிதாம் என்று மெய்யுணர்வுடையோர் சொல்லுகின்ற அருட் பெருஞ் சோதியாகிய அருளரசே, வணக்கம். எ.று.

     சிவபோக நிலை யாவராலும் விரும்பப்படுவதாகலின், “நசைத்த மேனிலை” எனப்படுகிறது. மாமறைகள் என்றது, இருக்கு முதலிய வேதங்களை ஓதியுணர்ந்த வைதிக ஞானிகளை என அறிக. திகைத்தல் - திசைத்தல் என வந்தது. உயங்குதல் - மெலிதல்.உயங்கின - முற்றெச்சம்; எச்சப் பொருளில் வந்த முற்று வினை என்பதும் உண்டு. முயற்சி முற்றாமையால் கைவிட்டமை புலப்பட, “மயங்கித் திரும்பின” என்று கூறுகின்றார். இசைத்தல் - சொல்லுதல். ஆராமையால் “ஐயகோ” என்பது குறிப்பு. இசைத்தற்குக் கருவி நாவாதலின், அதுதானும் சோர்ந்தமை தோன்ற, “நாவை அசைத்திடற் கரிது” என்றும், இவ்வாறு உரைப்பவர் வேத வேதாந்தங்களை முழுதுணர்ந்த சான்றோர் என்பாராய், “உணர்ந்துளோர்” என்றும் இயம்புகின்றார்.

     (4)