4621.

     சுத்தவே தாந்த மவுனமோ அலது
          சுத்தசித் தாந்தரா சியமோ
     நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
          நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
     புத்தமு தனைய சமரசத் ததுவோ
          பொருள்இயல் அறிந்திலம் எனவே
     அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
          அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

உரை:

     வேத வேதாந்த நூல்களின் ஞானம் நல்கும் சுத்த அனுபவமாகிய மவுனமோ; அன்றிச் சித்தாந்தமாகிய சிவாகம ஞானம் நல்கும் சிவானந்த போக நிலையோ; அன்றி, நித்தியமாகிய பரநாதாந்த நிலையின்கண் எய்தும் அனுபவானந்தமோ; அன்றி, பேசப்படுகின்ற வேறு அந்தங்களுக்கு அந்தமாகிய நிலையோ; அன்றி, புதிது பெற்ற அமுதம் போன்ற சமரச ஞானானுபவத்தின் கண்ணதோ; ஞானானுபவப் பொருளின் தன்மையை யாங்கள் அறியோம்; என்று ஞானானுபவங்களை யறிந்த சான்றோர் பலகாலும் சொல்லிப் பராவும் அருட்பெருஞ் சோதியாகிய அருளரசே, வணக்கம். எ.று.

     வேத வேதாந்தங்களையுணர்ந்த சனகர் முதலிய நால்வரும் முடிவிற் பெற்ற ஞானானுபவம் கல்லாலின் கீழ் இருந்து கண்டது மோன நிலையாதல் பற்றி, “சுத்த வேதாந்த மவுனமோ” என்று சொல்லுகின்றார். “ஒரு கை மார்பொடு விளங்க ஒரு கை தாரொடு பொலிய” (முருகு-111-3) என்பதன் உரையில், “இறைவன் மோன முத்திரை யத்தனாய்த் தானாயே இருந்து காட்ட ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற் போல ஆனந்தமயமான ஒளி மாணாக்கர்க்கு நிறைதலின், அதற்குரிய மோன முத்திரை கூறிற்று” என நச்சினார்க் கினியார் கூறுவது காண்க. இம் மோன நிலையைத் தூய்மையென ஞானாமிர்தம் என்னும் தமிழாகமம் உரைத்தலால் (ஞானா-47), “சுத்த வேதாந்த மவுனமோ” என்று சிறப்பிக்கின்றார். சித்தாந்தம் - சிவாகம ஞானம். சித்தாந்தமாகிய ஆகமாந்த முடிந்த நிலையைச் சேக்கிழார், “போத நிலை முடிந்த வழி ஒன்றியுடனாம்” நிலை என்பர். இச் சிவபோகானுபவ நிலையும் தூய்மையாதல் புலப்பட, “சுத்த சித்தாந்த ராசியமோ” என மொழிகின்றார். இராஜ்யம் - ராசியம் என வந்தது. சிவபோக நிலையைச் சிவராஜ்யம் என்பது கொண்டு “சித்தாந்த ராசியமோ” என்று தெரிவிக்கின்றார். சுத்த மாயா மண்டலத்தின் மத்தகத்தில் உள்ள முடிநிலை நாதாந்தம்; அதுதானும் ஏனை மாயா காரியமாகிய தத்துவங்கள்போல் அநித்தமாதலால், மாயா மண்டலத்துக்கு அதீதமான பரவிந்து வெளியின்கண் விளங்கும் பரநாத தத்துவ நிலையைக் காட்டற்கு, “நித்த நாதாந்த நிலை” என வுரைக்கின்றார். பிற முடிபுகள், யோகாந்தம், போதாந்தம் என வரும் அறுவகை யந்தங்கள். இம்முடி நிலைகளை வேறுவேறாகக் கொள்ளாமல் சமரசமாக ஒப்ப நோக்கி யின்புறும் சமரச ஞானானுபவம் இங்கே “புத்தமு தனைய சமரசம்” எனப் புகலப்படுகிறது. தாயுமானவர் காட்ட வடலூர் வள்ளல் கண்டு போற்றுகின்றமையின், “புத்தமுது” எனக் கூறுகின்றார். பொருளியல் - பரம்பொருளின் பரமாந்தன்மை. இக் கருத்துக்களை மெய்யுணர்ந்த ஞானவான்களின் மேல் ஏற்றி யுரைக்கின்றாராகலின், “அத்தகை யுணர்ந்தோர்” எனவும், அவர்கள் தாம் உரைப்பது ஆய்ந்தாய்ந்து கண்ட வுண்மை யென்றும், அதனைக் கொள்க என்று வற்புறுத்தற்கு, “உரைத்துரைத்து ஏத்துகின்றார்கள்” என்றும் இயம்புகின்றார்.

     (5)