4622. ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
உரை: பாருட்டன்மையில் ஒன்றோ; அல்லது பலவோ; இயற்கையோ அன்றிச் செயற்கையோ என்றும், சேதனமோ அல்லாத அசேதனமோ என்றும், இரண்டுமல்லாத பொதுப் பொருளோ, சிறப்பாய பொருளோ என்றும், பெண்மைப் பொருளோ அன்றி ஆண்மைத் தன்மையுற்று விளங்கும் ஆண்மைப் பொருளோ, அன்றி அதுவென்று சுட்டப்படும் அசேதனப் பொருளோ என்றும், கூடற்குரிய பொருளோ, அன்றிப் பிரிதற்குரிய பொருளோ என்றும், ஒளியுடைப் பொருளோ அன்றி அது பரவும் ஆகாச வெளியோ என்றும், இத்தன்மைத்து என வரையறுத்து உரைப்பது எவ்வாறோ எனச் சான்றோர் மனத் தெளிவோடு உரைத்துப் போற்ற நின்று விளங்கும் அருட்பெருஞ் சோதியாகிய அருளரசே, வணக்கம். எ.று.
ஏகம் - ஒன்று; அநேகம் - பல; இயற்கை சகசம் எனவும், செயற்கை ஆகந்துகம் எனவும் கூறப்படும். சித்து - அறிவுடைப் பொருள்; உடல் அசித்தாதலின், “தேகமோ” எனச் செப்புகின்றார். பொது - சாமானியம். சிறப்பு - விசேடம். அஃறிணை யொருமைப் பொருள் அது என்று சுட்டியுரைக்கப்படும். யோகம் - கூடுதல்; அது சமவாயம், சையோகம், சம்யுக்த சமவாயம் என்றெல்லாம் வகுக்கப்படும். பிரிவு - பிரிதல். இதனை விபாகம் என்றலும் உண்டு. வெளி - ஆகாயம். ஆகம் - ஈண்டு மனத்தின் மேற்று. (6)
|