4623.

     தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
          தத்துவா தீதமேல் நிலையில்
     சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
          சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
     ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
          ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
     றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
          அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

உரை:

     தத்துவங்கள் யாவற்றையும் ஒன்று விடாமற் கடந்து தத்துவாதீதமாகிய மேனிலையையடைந்து அங்கே நிலவும் ஞான பரவெளியையும் கண்டோம்; அவற்றிற்கு மேலுள்ள சிவாகாசத்து சிவவொளி தோன்றக் கண்டு அது நோக்கிச் சென்றேமாக, சிவஞானமும் எம்முடைய ஆன்ம ஞானமும் என்ற இரண்டு சிவமாந்தன்மையால் ஒத்து விளங்கும் அந்நிலையில் ஆன்மாவாகிய யாமும் எமது ஆன்ம சிற்சத்தியும் ஒருங்கே சிவத்திற் பொருந்தக் கரைந்தொழிந்தன என்று சிவயோகமாகிய அவ்வியல்பை இனிது உணர்ந்த சிவஞானிகள் சொல்லித் துதிக்க ஓங்குகின்ற அருட் பெருஞ் சோதியாகிய அருளரசே, வணக்கம். எ.று.

     ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூவகைப்பட்டு முப்பத்தாறாய் விரிதலின், “தத்துவ மனைத்தும்” எனக் கூறுகின்றார். தத்துவப் பகுதிகளை ஒவ்வொன்றாய்க் கடந்து மாயா காரியமாகிய அவற்றின் மேலெல்லையாகிய தத்துவாதீத நிலையை அடைந்தமை விளங்க, “தத்துவாதீத மேல் நிலையில்” என மொழிகின்றார். மாயா மண்டலத்துக்கு மேல்நிலை “தத்துவாதீத மேனிலை” என்று கூறுவர். திருமூலர் அதனைப் பரவியோமம் என்பர். அது ஞானாகாசமாதல் பற்றிச் “சித்தியல்” எனவுரைக்கின்றார். சித்து - ஞானம். சிவஞான வொளி பரவிய சிவாகாசம் ஈண்டுச் சிவநிலை எனச் சுருங்கக் காட்டப்படுகிறது. தசகாரியம் உரைக்கும் நூல்கள் இப்பகுதியைச் சிவரூபம் எனவும், சிவதரிசனம் எனவும் குறிக்கின்றன. சிவதரிசனம் பெற்ற வழி எய்தும் நிலை சிவயோகம்; அதனைச் “சிவநிலை தெரிந்திடச் சென்றேம்” என்றும், சிவமாம் தன்மையுற்ற நிலையை, “ஒத்த அந்நிலைக்கண்” என்றும், சிவம் வேறு தான் வேறு என்பதின்றிச் சிவயோக மாயினமை விளங்க, “யாமும் எம் உணர்வும் ஒருங்குறக் கரைந்து போயினம்” என்றும் விளங்க வுரைக்கின்றனர். இது சிவயோகம் பெற்ற சிவயோகியர் கூற்றாதல் புலப்பட, “அத்தகை யுணர்ந்தோர் வழுத்த” என வுரைக்கின்றார். யோகம் - கூடுதல்.

     (7)