4624.

     எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
          இதுஅது எனஉரைப் பரிதாய்த்
     தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
          தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
     பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
          புத்தமு தருத்திஎன் உளத்தே
     அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
          அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

உரை:

     எங்குமாய்ப் பரந்து விளங்குகின்ற ஞான சபையின்கண் சிவமிது சிவமாம் தன்மையுற்ற ஆன்மா அது எனப் பிரித்துக் காண மாட்டாததாய்ச் சிவயோகமுற்று நிற்கும் இயற்கைத் தனியனுபவத்தை எனக்குத் தந்து என்னைச் சிவமாகிய தன்வயப்படுத்தி அந்நிலையிற் பொங்கிப் பெருகும் சிவானந்தப் பெரும் போகத்தை யுடையவனாக்கி அப்போகமாகிய புதிய சிவாமிர்தத்தை என்னை நுகர்வித்து என் உள்ளத்தின்கண் அங்கையில் வைத்த நெல்லிக்கனிபோல் எழுந்தருள்கின்ற அருட் பெருஞ் சோதியாகிய அருளரசே, வணக்கம். எ.று.

     எவ்விடத்தும் எப்பொருளிலும் எக்காலத்தும் பரந்து நிற்பதாகலின் சிவத்தின் ஞானநிலை, “எங்குமாய் விளங்கும் சிற்சபை” எனப்படுகிறது. அது சிவயோகம் நிகழும் இடமாதலின் அவ்யோகானுபவத்தை, “இது அது என வுரைப்பரிதாய்த் தங்கும் ஓர் இயற்கைத் தனியனுபவம்” எனக் கூறுகின்றார். காண்பானும் காணப்படுவதுமாய் வேறுபட்டு நிற்றலின்மையின், சிவயோகத்தை, “இது அது எனவுரைப்பரிதாய்” என உணர்த்துகின்றார். வேறுபட்ட வழி யோகமாகாது என அறிக. சிவயோகத்தில் விளைவது சிவபோகமாதலால், போக நுகர்வைத் “தன்வயமாக்கி” என்றும், “பொங்கும் ஆனந்தப் போக போக்கியனாய்” என்றும், சிவபோகம் நுகருந்தோறும் புத்தின்பம் தருதல் பற்றி, “புத்தமு தருத்தி” என்றும், தன்னின் நீங்காமை புலப்பட, “என் உளத்தே அங்கையிற் கனிபோன்று அமர்ந்தருள் புரிந்த அருட் பெருஞ் சோதி” என்றும் இயம்புகின்றார். “புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய் வளர்கின்றது” எனத் திருக்கோவையார் உரைப்பது காண்க. அங்கையிற் கனி - உள்ளங் கையிற் கொண்ட நெல்லிக் கனி. இதனைக் கரதலாமலகம் என்பது முண்டு.

     (8)