4626.

     கருவிற் கலந்த துணையேஎன்
          கனிவில் கலந்த அமுதேஎன்
     கண்ணிற் கலந்த ஒளியேஎன்
          கருத்திற் கலந்த களிப்பேஎன்
     உருவிற் கலந்த அழகேஎன்
          உயிரிற் கலந்த உறவேஎன்
     உணர்விற் கலந்த சுகமேஎன்
          னுடைய ஒருமைப் பெருமானே
     தெருவிற் கலந்து விளையாடுஞ்
          சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
     சித்தி அளித்த பெருங்கருணைத்
          தேவே உலகத் திரளெல்லாம்
     மருவிக் கலந்து வாழ்வதற்கு
          வாய்த்த தருணம் இதுஎன்றே
     வாயே பறையாய் அறைகின்றேன்
          எந்தாய் கருணை வலத்தாலே.

உரை:

     கருவிலேயே என் உயிரிற் கலந்த துணைவனே! என் மனம் கனிந்துருகுமிடத்து அக்கனிவிற் கலந்து இனிக்கும் அமுது போல்பவனே! என் கண்ணிற் கலந்து ஒளிரும் ஒளியாகியவனே! என் உள்ளத்திற் கலந்து மகிழ்விக்கும் இன்பப் பொருளே! என் மேனியிற் கலந்து நிலவும் அழகுருவாயவனே! என் உயிர்க்குயிராய்உற்று நிற்கும் உறவாகியவனே! என் உணர்வோடு உணர்வாய் ஒன்றிய சுகப் பொருளே! என்னையுடைய ஒன்றாகிய பெருமானே! தெருவின்கண் பிற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடும் சிறியவனாகிய எனக்கு மெய்ம்மை சான்ற ஞான சித்தியை அளித்தருளிய பெரிய கருணை யுருவாகிய தேவனே! உலகத்தில் வாழ்கின்ற உயிர்த் திரள் யாவும் தம்மிற் கலந்து வாழ்வதற்கு வாய்த்த சமயம் இதுவேயென்று நின்னுடைய திருவருள் வன்மையால் வாய் பறையாகவும் நா கடிப்பாகவும் கொண்டு விளம்புகின்றேன். எ.று.

     தாய் வயிற்றில் கருப்பாசயத்தில் யான் கருவாயிருந்தபோதே கலந்து கொண்ட துணைமை நலம் தோன்ற, “கருவிற் கலந்து துணையே” என இயம்புகின்றார். மனம் அன்பாற் கனிகின்றபோது ஓர் இன்பம் ஊற்றெழுவது பற்றி, “கனிவிற் கனிந்த அமுதே” என்றும், கண்ணாகிய உறுப்பும் மணியும் உளவாயினும் ஒளியில்லையாயின் பயனின்மையின் பயப்பாடு கருதி ஒளி தருதலால், “கண்ணிற் கலந்த ஒளியே” என்றும், உள்ளத்தில் உவகை தோன்றுமிடத்து இரண்டிற்குமுள்ள தொடர்பு புலப்பட, “கருத்திற் கலந்த களிப்பே” என்றும் இசைக்கின்றார். என்பு தோல் போர்த்த உடம்புக்கும் அதன்கண் இலகும் அழகுக்கும் உரிமை தோற்றுவிக்கும் சிறப்பு விளங்க, “என் உருவிற் கலந்த அழகே” எனவும், உயிர்க்குயிராகும் கலப்புத்தோன்ற, “என் உயிரிற் கலந்த உறவே” எனவும், உணர்விடை எய்தும் அனுபவத்தை, “உணர்விற் கலந்த சுகமே” எனவும் இயம்புகின்றார். ஒருமைப் பெருமான் - ஒன்றாகிய சிவபெருமான். ஞான சித்தி - ஈண்டுத் திருவருள் ஞானம் கைவரப் பெறுதல். உலகத் திரள் என்பது உலகத்திலுள்ள உயிர்த் தொகுதியைக் குறித்து நிற்கிறது. வேற்றுமை நோக்காது ஒருமை யுணர்வும் சமரசத் தன்மையும் எய்தி வாழ்வதையே வடலூர் வள்ளல் சுத்த சமரச வாழ்வெனக் கொண்டவராதலின், அக்கொள்கையை உலகிற்குரைக்கின்றேன் என்கின்றாராதல் விளங்க, “வாயே பறையாய் அறைகின்றேன்” என மொழிகின்றார். நாக் கடிப்பாக வாய்ப்பறை அறைதல் என்பது பண்டையோர் சொல் வழக்கு. கடிப்பு - பறையை அறையும் குறுங்கோல்.

     (2)