4627.

     தானே தயவால் சிறியேற்குத்
          தனித்த ஞான அமுதளித்த
     தாயே எல்லாச் சுதந்தரமும்
          தந்த கருணை எந்தாயே
     ஊனே விளங்க ஊனமிலா
          ஒளிப்பெற் றெல்லா உலகமும்என்
     உடைமை யாக்கொண் டருள்நிலைமேல்
          உற்றேன் உன்றன் அருளாலே
     வானே மதிக்கச் சாகாத
          வரனாய் எல்லாம் வல்லசித்தே
     வயங்க உனையுட் கலந்துகொண்டேன்
          வகுக்குந் தொழிலே முதலைந்தும்
     நானே புரிகின் றேன்புரிதல்
          நானோ நீயோ நான்அறியேன்
     நான்நீ என்னும் பேதம்இலா
          நடஞ்செய் கருணை நாயகனே.

உரை:

     தானே என்பாற் கொண்ட கருணையால் சிறுமையுடைய எனக்கு ஞானமாகிய அமிர்தினை யளித்தருளிய தாயாகியவனே! எல்லா வுரிமைகளையும் எனக்குத் தந்தருளிய கருணை நிறைந்த தந்தையாகியவனே! உடம்பெங்கும் விளக்கமுறக் குற்றமில்லாத ஞானவொளி பெற்று உலகனைத்தையும் எனக்குரிய உடைமையாகக்கொண்டு திருவருள் மேனிலையை உனது திருவருளால் எய்தியுள்ளேன்; வானகத்துத் தேவர்கள் கண்டு என்னை நன்கு மதிக்குமாறு சாகாமைக்குரிய வரமுடையவனாய் எல்லாம் செயல் வல்ல அறிவாற்றல் விளங்க உன்னை என்னுட் கலந்து கொண்டேன்; அதனால் படைக்கும் தொழில் முதலாகவுள்ள ஐந்தொழில்களையும் நானே செய்கின்றேன்; செய்யுமிடத்து செய்வது நானோ நீயோ என்று நான் பிரித்தறிய மாட்டேனாகின்றேன்; காரணம், நான் வேறு நீ வேறு எனப் பிரித்தறியாவாறு ஒன்றிய திருநடனம் செய்கின்ற கருணையே உருவாகிய தலைவனாதலால். எ.று.

     தயவு - கருணை. சிறியேன் - அறிவாற்றல்களில் சிறுமை யுடையவன். அமுதம் போல் நிலைத்த வாழ்வு தருவதாகலின், சிவஞானத்தை, “ஞான வமுது” என்று சிறப்பிக்கின்றார். சுதந்திரம், அறிதல் விழைதல், தொழில் புரிய வேண்டும் தடையிலாத முற்றுரிமை. பேரருளுடையார்க் கன்றித் தன் அருணிழலில் வாழ்வார்க்கு முற்றுரிமை வழங்கல் ஆகாதாதலால், “கருணை எந்தாயே” என்று பாராட்டுகின்றார். ஊன் - உடம்பு. உடம்பின் உள்ளும் புறத்தும் குறைபடா நிறைவுற ஞானவொளி பெறப்படுதல் பற்றி, “ஊனமிலா ஒளி பெற்று” என்றும், தாம் பெற்ற அருளொளியால் உலகனைத்தையும் தமக்கு உரிய பொருளாக உணர்கின்றமை புலப்பட, “எல்லா வுலகமும் என் உடைமையாகக் கொண்டு அருள்நிலை மேல் உற்றேன்” எனவும், அதற்குக் காரணம் பரம்பொருளின் பேரருள் என்றற்கு, “உன்றன் அருளாலே” எனவும் இயம்புகின்றார். அருள்நிலை மேல் என்றது, அருட் சத்தியின் மேனிலையாகிய சிவதத்துவ நிலை. அது ஞானமே யுருவாக அமைந்ததாகலின், அதனைத் தேவர்கள் போற்றுவதியல்பாதல் பற்றி, “வானே மதிக்க” என்றும், அத்தேவர்கள் சாவா நிலையினராதலால், தாம் உடைய சாவா நிலையினும் வள்ளலார் எய்திய சாகா வரம் மேதக்க தென்பது விளங்க, “சாகா வரனாய்” என்றும் அறிவிக்கின்றார். சாகாவரன் - சாதல் இல்லாத வரம் உடையவன். எல்லாம் செயல் வல்ல பொருள் அசித்தாக மாட்டாமையின், “எல்லாம் வல்ல சித்தே வயங்க” என்றும், அத்தகைய சித்துப் பொருள் எய்தியவிடத்து எல்லாம் வல்லனாகும் ஆற்றல் தானே அமைதலால், “உனையுட் கலந்து கொண்டேன்” என்றும் கூறுகின்றார். வல்ல செயல்கள் இவையென விளக்குதற்கு, “வகுத்தும் தொழிலே முதல் ஐந்தும் நானே புரிகின்றேன்” என மொழிகின்றார். வகுக்கும் தொழில் - படைக்கும் தொழில். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தையும் “வகுக்கும் தொழிலே முதல் ஐந்து” என்று கூறுகின்றார். நான் வேறு நீ வேறு என்னாதபடி அத்துவிதமாதல் விளங்க, “நான் நீ என்னும் பேதமிலா நடஞ்செய் கருணை நாயகனே” என்றும், நானும் நீயும் ஒன்றியிருந்து இத்தொழில்கள் ஐந்தையும் செய்வதால் செய்பவன் நானோ நீயோ எனப் பிரித்தறிய மாட்டேனாயினேன் என்பாராய், “புரிதல் நானோ நீயோ நான் அறியேன்” என்றும் சொல்லுகின்றார்.

     (3)