4628.

     கலைசார் முடிபு கடந்துணர்வு
          கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
     கருணை மயமாய் விளங்குசிதா
          காய நடுவில் இயற்கையுண்மைத்
     தலைசார் வடிவில் இன்பநடம்
          புரியும் பெருமைத் தனிமுதலே
     சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட்
          சார்ந்து விளங்கும் சற்குருவே
     புலைசார் மனத்துச் சிறியேன்றன்
          குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
     பொன்றா வடிரு கொடுத்தெல்லாம்
          புரிவல் லபந்தந் தருட்சோதி
     நிலைசார் இறைமை அளித்தனைநான்
          பொதுவில் ஞான நீதிஎனும்
     நிருத்தம் புரிகின் றேன்புரிதல்
          நீயோ நானோ நிகழ்த்தாயே.

உரை:

     கலை நூல்கள் காட்டும் முடிபுகளைக் கடந்து அவற்றால் எய்தும் உணர்வெல்லையையும் கடந்து நிறைவுற்று, குற்றமில்லாததாய்க் கருணை மயமாய், சிறந்து விளங்கும் ஞானாகாசத்தின் நடுவிடத்தே இயற்கை யுண்மையின்கண் அமைந்த தலைமை சான்ற உருவுடன் இன்பத் திருக்கூத்தை இயற்றும் தனிமுதற் சிவ பரம்பொருளே! சாகாமை நல்கும் கல்வியை யான் பயில்வித்து என் உள்ளத்திற் பொருந்தி விளங்குகின்ற சற்குருபரனே! புலையுணர்வு கொண்ட மனத்தால் சிறுமைத் தன்மை யுற்றிருக்கின்ற என்னுடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுத்து அழியா வுருவையும் எனக்களித்து எல்லாம் செய்யக் கூடி வல்லமையையும் தந்து, அருட் சோதி நிலைபெற்ற இறைமைத் தன்மையை எளியேனுக்கு அளித்துள்ளாய்; நானும் திருவம்பலத்தில் ஞானநீதி எனப்படுகின்ற திருநடனம் புரிகின்றேன்; எனது நடனத்தை நோக்கும் போது அதனைச் செய்வது நானோ நீயோ, விளங்கத் தெரிவித்தருள்க. எ.று.

     கலைஞானத்துக்கு அப்பாலதாய் அருள் மயமாய்க் குற்றம் சிறிதுமின்றி விளங்குவது ஞானாகாசம் என்றற்கு, “கலைசார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க் கருணை மயமாய் விளங்கு சிதாகாயம்” எனத் தெரிவிக்கின்றார். தலைசார் வடிவு - தலைமை யமைந்த திருவுருவம். தனிமுதல், ஒப்பற்ற முதற்பொருளாகிய சிவ பரம்பொருள். சாகாக் கல்வி - சாகாமை விளைவிக்கும் கல்வி; சாவா வுயிரின்கட் கிடந்து அது “புக்குழிப் புகும்” தனிச் சிறப்புடையதாதலால் சாகாக் கல்வி என்று குறிக்கின்றார். “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. சற்குரு - மெய்ப்பொருளைக் கற்பிக்கும் ஞானாசிரியன். கீழ்மையான எண்ணங்கள் எழுதற் கிடமாதல் பற்றிப் “புலைசார் மனத்துச் சிறியேன்” என்று கூறுகின்றார். பொன்றா வடிவு - அழியா ஞான வடிவு. இதனைப் பண்டையோர் “சிவானந்த ஞான வடிவு” என்பர். புரிதல் - செய்தல். வல்லபம்-வல்லமை. இறைமை - சிவமாந் தன்மை. அருள் ஞானம் காட்டும் நெறியில் தாம் வாழ்கின்ற வாழ்வியலை, “ஞான நீதியெனும் நிருத்தல்” என மொழிகின்றார். நிருத்தம் - கூத்து. வாழ்வதும் ஒருவகைக் கூத்தாதலால் இவ்வாறு இயம்புகின்றார். சிவஞானத்தால் சிவமாகிய வழிச் சீவத் தன்மை கரைந்து மறைந்து போதலால், “நிருத்தம் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே” என வேண்டுகின்றார். நிகழ்த்துதல் - சொல்லுதல்.

     (4)