4629. கருத்தில் கருதிக் கொண்டஎலாம்
கணத்தில் புரிய எனக்கேமெய்க்
காட்சி ஞானக் கண்கொடுத்த
கண்ணே விடயக் கானகத்தே
எருத்தில் திரிந்த கடையேனை
எல்லா உலுகும் தொழநிலைமேல்
ஏற்றி நீயும் நானும்ஒன்றாய்
இருக்கப் புரிந்தாய் எந்தாயே
இருத்திக் கருத்தில் உன்தயவை
எண்ணுந் தோறும் அந்தோஎன்
இதயம் உருகித் தளதளஎன்
றிளகி இளகித் தண்ணீராய்
அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந்
தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
அதுஎன் றொன்றும் தோற்றாதே
அச்சோ அச்சோ அச்சோவே.
உரை: மனத்தில் விரும்பிக்கொண்ட கருத்தெல்லாம் கணப் பொழுதில் செய்துகொள்ளுமாறு எனக்கு உண்மை ஞானக் காட்சி பொருந்திய கண்ணைக் கொடுத்தருளிய கண் போன்ற பெருமானே! உலக போகங்களாகிய காட்டில் காட்டெருதுபோல் அலைந்த கீழ் மகனாகிய என்னை எல்லா வுலகத்தில் உள்ளவரும் கண்டு வியந்து கை தொழ மேனிலையில் என்னை யுயர்த்தி நீயும் நானும் ஒன்றியிருக்க அருள் செய்தாய்; எந்தையே, உனது அருள் நலத்தைக் கருத்திற்கொண்டு எண்ணுந் தோறும், அந்தோ, என் மனம் உருகித் தளதளவென்று இளகித் தண்ணீராய்ப் பெருகி, மிக்க நீர்ப் பெருக்கையுடைய ஆற்றொடு கலப்பதுபோல் நின்கண் பெருகும் அன்புப் பெருக்கில் கலந்து ஒன்றாகி விட்டது, இனி அது வென்றும் நான் என்றும் பிரித்தறியத் தோன்றாதாயிற்று; இஃது என்ன வியப்பு. எ.று.
மனத்தால் விரும்பியவற்றை நொடிப் பொழுதில் புறத்தே கண்டு கொள்ளும் மெய்ம்மை ஞானக் காட்சி தமக்கு அமைந்திருப்பதாகவும், அஃது இறைவனால் தமக்குச் சிறப்பாக வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிப்பாராய், “கருத்திற் கருதிக் கொண்டவெலாம் கணத்திற் புரிய எனக்கு மெய்க் காட்சி ஞானக் கண் கொடுத்த கண்ணே” என்று கூறுகின்றார். கருதிய பொருளின் மெய்ம்மை நிலையை விரைந்து காலத்தில் கண்டறிந்து கொள்ளும் ஞானக் காட்சியமைந்த - கண் என்றற்கு, “மெய்க் காட்சி ஞானக் கண்” என்றும், கண் கொடுத்தமையின் கண்ணே என்றும் உரைக்கின்றார். விடயக் கானகம் - கண் முதலிய பொறிகள் ஐந்தாலும் நுகரப்படும் பொருள்கள் நிறைந்த உலகியற் போக போக்கியங்கள். கண்ணாற் கண்டு அனுபவிக்கப்படும் பொருள் விடயம்; அதுபோல் ஏனைப் பொறிகளால் நுகரப்படும் போக போக்கியங்களை இந்திரிய விடயம் என்பர். ஆன்மாவைக் காட்டெருதாகவும், பொறிகட்குரிய விடயங்கள் நிறைந்த உலகியலைக் காடாகவும், அதன்கண் வாழ்தலை விளக்க, “விடயக் கானகத்தே எருத்தின் திரிந்த கடையேன்” என வுரைக்கின்றார். உலகியற் போகங்களில் அழுந்திக் கீழ்மையுற்றிருந்த தம்மை ஞானக் காட்சி தந்து எல்லாவுலகத்தவரும் கண்டு வியந்து போற்ற இறைவன் உயர்த்தினான் என்றற்கு, “எல்லா வுலகும் தொழ மேல்நிலை ஏற்றி” என்றும், அந்நிலையில் சீவனாம் தன்மை மாறிச் சிவமாம் தன்மை எய்தினமை புலப்பட, “நீயும் நானும் ஒன்றாய் இருக்கப் புரிந்தாய்” என்றும் கூறுகின்றார். இறைவனது இத் திருவருட் பெருநலத்தை நினைக்கும் போதெல்லாம் உள்ளத்தில் அன்பு தோன்றி ஆறாய்ப் பெருகி ஒன்றாவதை உணர்த்தலுற்று, “இதயம் உருகித் தளதளவென்று இளகித் தண்ணீராகி” என்றும், தண்ணீர் பெருகி பெருநீர் ஓடும் ஆற்றொடு சேர்வதுபோல் “அன்பு பெருக்கிற் கலந்தது” என்றும் உரைக்கின்றார். அன்பே சிவமாதலின், அதன்கட் கலக்கும் சீவ அன்பு வேறு வேறாகப் பிரித்தறிய விளங்காதாயிற்றென் பார், “நான் அது என்று ஒன்றும் தோற்றாதே” என விளம்புகின்றார். அச்சோ - வியப்பை யுணர்த்தும் இடைச் சொல். “அத்தன் எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம்) என மணிவாசகர் வியந்துரைப்பது காண்க. (5)
|