4630.

     ஏதும் தெரியா தகங்கரித்திங்
          கிருந்த சிறியேன் தனைவலிந்தே
     எல்லா உலகும் அதிசயிக்க
          எல்லாம் வல்ல சித்தெனவே
     ஓதும் பொருளைக் கொடுத்தென்றும்
          உலவா இன்பப் பெருநிலையில்
     ஓங்கி உறவைத் தனையேஎன்
          னுடைய ஒருமைப் பெருமானே
     ஈதுன் கருணைக் கியல்போநீ
          என்பால் வைத்த பெருங்கருணை
     இந்நாட்புதிதே அந்நாளில் இலையே
          இதனை எண்ணியநான்
     தாதும் உணர்வும் உயிரும்உள்ளத்
          தடமும் பிறவாந் தத்துவமும்
     தாமே குழைந்து தழைந்தமுத
          சார மயமா கின்றேனே.

உரை:

     யாதொன்றும் யறியாமல் அகந்தைகொண்டு இவ்வுலகில் இருந்து சிறியவனாகிய என்னை வலிய ஆட்கொண்டு எல்லா வுலகினரும் கண்டு அதிசயிக்குமாறு எல்லாம் செயல் வல்ல சித்து என்று சொல்லப்படுகின்ற வன்மைப் பொருளை எனக்குக் கொடுத்தருளி எக்காலத்தும் கெடாத இன்பத்தையுடைய பெரிய நிலையில் உயர்ந்திருக்கச் செய்துள்ளாய்; என்னை ஆளாகவுடைய சிவபெருமானே! இவ்வாறு செய்யுமிது உன்னுடைய கருணையின் இயல்போ? நீ என்பால் செய்கின்ற பேரருள் இப்போது எனக்குப் புதிதாக வுளது; கடந்த அந்த நாட்களில் செய்யவில்லை; இதனை எண்ணிப் பார்த்த நான் உடம்பும் உணர்வும் உயிரும் என் உள்ளமும் மற்றைத் தத்துவங்களும் உருகிக் குழைந்து அமுத சாரமாய் விளங்குகின்றேன். எ.று.

     ஏதும் என்பது யாதொன்றும் என்று பொருள்பட வந்தது. அகங்கரித்தல் - எல்லாம் தெரிந்தவர் போல இறுமாத்தல். அதனால் விளைவது கீழ்மை நிலையாதலின், “சிறியேன்” என வுரைக்கின்றார். எத்தகைய அரிய செயலையும் செய்யும் வித்தகம், எல்லாம் வல்ல சித்தெனப்படுகிறது. அதற்குரிய அறிவாற்றலைப் “பொருள்” என்று புகல்கின்றார். உலவா இன்பம் - குறையாத இன்பம். ஒருமைப் பெருமான் - ஒன்றாகிய பரம்பொருள். எல்லாம் செயல் வல்ல தன்மையை “ஈது” எனக் கூறுகின்றார். அந்நாள் என்றது இளமைக் காலம். தாது - தோல் நரம்பு என்பு முதலியனவாகும். இவற்றால் ஆகியது உடம்பாதலால், “தாது” என ஓதுகின்றார். மனத்தை இடமாகக் கருதினமையின், “உள்ளத் தடம்” என வுரைக்கின்றார். கண் காது முதலியவற்றைத் தத்துவம் என்பர். எய்துதற் கரியது எய்திய வழி உளதாகும் இன்ப நிலையை, “அமுத சார மயமாகின்றேன்” என்று கூறுகின்றார்.

     (6)