4631.

     ஓவா துண்டு படுத்துறங்கி
          உணர்ந்து விழித்துக் கதைபேசி
     உடம்பு நோவா துளமடக்கா
          தோகோ நோன்பு கும்பிட்டே
     சாவா வரமும் சித்திஎலாம்
          தழைத்த நிலையும் சன்மார்க்க
     சங்க மதிப்பும் பெற்றேன்என்
          சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
     ஆவா நினைக்கில் அதிசயம்என்
          அப்பா அரசே அமுதேஎன்
     ஆவிக் கினிய துணையேஎன்
          அன்பே அறிவே அருட்சோதித்
     தேவா இதுநின் செயலேஇச்
          செயலை நினைக்குந் தொறும்எனது
     சிந்தை கனிந்து கனிந்துருகித்
          தெள்ளார் அமுதம் ஆனதுவே.

உரை:

     வேளை தோறும் ஒழியாமல் உண்பன உண்டு பாயிற் படுத்து இனிதே உறங்கிப் பின் கண் விழித்துக் கதைகள் பல பேசித் தேகம் நோவாமலும் மனத்தை யடக்காமலும் ஓ, நோன்பிருந்து கும்பிட்டு வந்த நான் நின்பால் சாகா வரமும், சித்திகள் யாவும் நிறைந்த நிலையும், சன்மார்க்க சங்கத்துச் சான்றோருடைய நன்மதிப்பும் பெற்றுக் கொண்டேன்; என்னுடைய சாமார்த்தியம் பெரிதாகும்; என் வரலாற்றை, ஆஆ, நான் நினைக்குமிடத்து எனக்கு அதிசயமாக உளது; எனக்கு அப்பனும் அருளரசுமாகிய என் உயிர்க்கினிய துணைவனே; அன்பும் அறிவும், அருட் சோதித் தெய்வமும் ஆகிய பெருமானே; இவையெல்லாம் நினது அருட் செயல்களேயாகும்; இச்செயலை நினைக்கும் போதெல்லாம், என் மனம் மிகவும் கனிந்து உருகித் தெளிந்த அமுத மயமாகின்றது, காண். எ.று.

     உண்ணா நோன்பும், உறங்கா விரதமும், கதை பேசிக் காலம் கழிக்காத கொள்கையும், நன்னோன்புகளாகும்; அவற்றைச் செய்யாமலும், மெய் வருந்த வேலை செய்யாமலும் மனம் போன போக்கில் நினைந்தும் ஒழுகிய தமது நிலையை இறைவன் திருமுன் விண்டுரைக் கின்றாராதலின், “உடம்பு நோவாது உளம் அடக்காது நோன்பு கும்பிட்டேன்” என மொழிகின்றார். இது பழித்தற் குறிப்பு. தாம் பெற்ற பேற்றுக்கு ஓவா துண்டல் முதலியன தகுவன வல்ல என்பது குறிப்பு. தக்கோர் பெறுதற்குரிய சாகா வரமும் சித்திகளும் சன்மார்க்க சங்க நன்மதிப்பும் நான் பெற்றேன்; இப்பேறு எனக்கு வியப்பை விளைக்கின்றது என்பாராய், “ஆவா நினைக்கில் அதிசயம்” என இயம்புகின்றார். சதுர் - சாமர்த்தியம்; சமர்த்தான தன்மையாம் என்பது, சதுர் என வந்தது. உண்ணாமை உறங்காமை முதலியவற்றைச் செய்வார் பெறும் சாகா வரம் முதலியவற்றை நான் பெறுதலால் நான் செய்தன யாவும் நின் செயலாம் என்பாராய், “இது நின் செயலே” எனத் தெளிய வுரைக்கின்றார். என் செயலை நின் செயலாகக் கொண்டு நீ செய்த நல்லருளை நினைக்கும்போது என்னை நீ ஏன்று கொண்டாய் என்ற உணர்வு தோன்றி உவகை மிகுவிக்கின்றது என்றற்கு, “எனது சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளார் அமுத மானதுவே” என்று பரிவுடன் பாடுகின்றார். தெள்ளாரமுதம் - தெளிந்த அமுதம்.

     (7)